அநுரவை கடுமையாக சாடிய ரணில் : பதிலடி கொடுத்த அமைச்சர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாமை தொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த தகவல்கள் மூலமே ஜனாதிபதி அதனை அறிந்துகொண்டார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்தார்.
நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் விசேட அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
சமூக வலைத்தளம்
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து கடந்த 11ஆம் திகதி ரணில் தனது சகல சமூக வலைத்தளப் பக்கங்களிலும் தன்னால் அன்றைய தினம் முன்னிலையாக முடியாது என்றும், 17ஆம் திகதி முன்னிலையாவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது ஒரு பொதுத் தகவலாகும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) இதன் ஊடாகவே அந்த தகவலை அறிந்திருப்பார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி இந்த தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருந்ததை மறந்தே கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
மாறாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை. ரணில் ஆணைக்குழுவில் முன்னிலையாவது இரகசிய தகவல் அல்ல.
ரணில் விக்ரமசிங்க அவரது சமூக வலைத்தளங்களில் இந்த தகவலைப் பகிர்ந்த பின்னரே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். அதனை விடுத்து இந்த விவகாரத்தில் அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ எந்தவகையிலும் தலையிடவில்லை“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
