“நரி”யைப் பரியாக்குவது
கோட்டா ஒரு தொழில் சார் அரசியல் வாதியல்ல.வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை வென்ற காரணத்தாலும் மகிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலும் அவர் சிறிலங்கா அதிபராக வர முடிந்தது.
யுத்தத்தில் வென்றமைதான் தன்னுடைய பிரதான தகைமை என்று அவர் முழுமையாக நம்பினார். ஒரு படைத்துறை ஆளுமையாகவே தன்னைக் காட்டிக் கொண்டார். வெள்ளை மேற்சட்டையில் படைத்துறை மெடல்களை அணிந்தபடி காட்சியளித்த ஒரு அதிபராக அவர்.தன்னை எப்பொழுதும் வித்தியாசமானவராகவே கருதினார்.
எனைய சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து நடை உடை பாவனை எல்லாவற்றிலும் தன்னை வேறுபடுத்த விரும்பினார். அவர் வேட்டியும் நசனலும் அணிவதில்லை.தலைக்கு டை பூசுவதில்லை. அது மட்டுமல்ல தனது சகோதரர்களிடமிருந்தும் தன்னை வேறுபடுத்திக் காட்டினார். தமது குடும்பத்தின் குலச்சின்னமாகக் கருதப்பட்ட குரக்கன் நிறச்சால்வையை அவர் அணிவதில்லை. அவருடைய பதவியேற்பு வைபவத்தில் அவருடைய மூத்த சகோதரர் சமல் அந்தச் சால்வையை ஒரு பேழைக்குள் வைத்து அவருக்குப் பரிசளித்தார்.ஆனால் கோத்தா அந்தச் சால்வையை அணியவில்லை.
மின்னஞ்சலில் தனது ராஜினாமாக் கடிதத்தை அனுப்பிய அதிபர்
இவ்வாறாகத் தன்னை ஒரு வித்தியாசமான அதிபராக காட்டிக்கொண்ட ஒருவர் வித்தியாசமான முறையிலேயே தன் பதவியை விட்டு ஓட வேண்டி வந்தது. உலகிலேயே மின்னஞ்சலில் தனது ராஜினாமாக் கடிதத்தை அனுப்பிய நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு சிறிலங்கா அதிபர் கோட்டாபய தான்.
எந்த நாட்டைச் சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்ததாக பிரகடனப் படுத்தினாரோ அதே நாட்டில் அவருக்குப் பாதுகாப்பு இல்லை. தன் சொந்த மக்களுக்கு பயந்து ஓடி ஒளிய வேண்டிய நிலை.முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புறக்கணித்து ஜனாஸாக்களை எரிக்குமாறு உத்தரவிட்டவர் ஒரு முஸ்லிம் நாட்டில் முதலில் தஞ்சம் அடைந்தார்.
புத்த பகவான் கூறுவது போல மாற்றம் ஒன்றுதான் மாறாதது. கடந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்த மாற்றங்களைத் தொகுத்துப்பார்த்தால், யாப்புச் செயலிழந்துவிட்டது, நாடாளுமன்றம் செயலிழந்துவிட்டது, சட்டம் ஒழுங்கு செயலிழந்துவிட்டது. யாப்பின்படி மகிந்தவையும் கோட்டாவையும் நீக்கமுடியாது. ஆனால் மக்கள் எழுச்சிகளின்மூலம் அவர்கள் நீக்கப்பட்டு விட்டார்கள்.
நாடாளுமன்றம் அதன் மக்கள் ஆணையை இழந்துவிட்டது.எந்தக் கட்சிக்கு 69 லட்சம் பேர் ஆணையை வழங்கினார்களோ,அந்தக் கட்சியின் பிரதானிகளை மக்கள் ஓடஓடத் துரத்துகிறார்கள். சட்டம் ஒழுங்கும் செயலிழந்து விட்டது. ஊரடங்குச்சட்டம் அவசர காலச்சட்டம் என்பவை இருக்கத்தக்கதாகவே ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச கட்டிடங்களை கைப்பற்றுகிறார்கள்.
நாட்டின் அதிபர்தான் முப்படைகளின் தளபதி.தன் படைகளை முழுமையாக அவர் நம்பியிருந்திருந்தால் நாட்டில் எங்காவது ஒரு படைத்தளத்தில் மறைவாக இருந்திருக்கலாம்.அவர் நாட்டை விட்டு ஓடத் தீர்மானித்தமை என்பதில் அவர் படையினரையும் நம்பத் தயாரில்லை என்ற செய்தி உண்டு.இதுதான் இலங்கை தீவின் இப்போதுள்ள நிலைமை.
மக்கள் ஆணை இல்லாத ரணில்
ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் ஆணை இல்லை .தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்படாத நிறைவேற்று அதிகாரம் உடைய ஒரு பதில் அதிபராக அவர்.எதிர்க்கட்சிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.அவர் ராஜபக்சகளைப் பாதுகாப்பவர் என்பதனால் அவருக்கு தாமரைமொட்டுக் கட்சியின் ஆதரவு கிடைக்கும்.தவிர,மேற்கு நாடுகளும் ஐ.எம்.எஃபும் அவரை ஆர்வத்தோடு பார்க்கின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்களின் பின்னணியில் நிற்பதாக கருதப்படும் இடதுசாரி மரபில் வந்த அமைப்புகளை மேற்கு நாடுகள் எச்சரிக்கை உணர்வோடுதான் பார்க்கின்றன.கோட்டாபயவை அகற்றுவதற்கான கருவிகளாக மேற்படி இடதுசாரி மரபில் வந்த அமைப்புக்களை ஏற்றுக்கொள்ளும் மேற்கு நாடுகள்,அந்த வெற்றியின் அடுத்த கட்டமாக மேற்படி கட்சிகளும் அமைப்புகளும் அரசியலில் முதன்மை ஸ்தானத்துக்கு வருவதை ரசிக்கவில்லை.இந்தியாவும் அதை ரசிக்காது.
எனவே மேற்குநாடுகளும் ரணிலைப் பாதுகாக்க விரும்பும். ராஜபக்சக்களும் ரணிலைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்.இனிவரும் நாட்களில் ரணிலைப் பலப்படுத்துவதற்கான பேரங்களும் சூழ்ச்சிகளும் அதிகமிருக்கும்.வெளியிலிருந்தும் அவருக்கு உதவிகள் பாய்ச்சப்படும்.ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களும் எதிர்க்கட்சிகளும் ரணிலை அகற்ற விரும்புகின்றனர்.
ஆயின் அடுத்த கட்டம் என்ன? காலாவதியான நாடாளுமன்றத்தை வைத்துக்கொண்டு ஒன்றையும் செய்ய முடியாது. ஒரு புதிய மக்களானையை பெறுவதற்கான ஒரு தேர்தலுக்குப் போக வேண்டும். ஆனால் அது உடனடிக்கு முடியுமா? ஒரு தேர்தல் நடக்கும் வரையிலும் இடைக்கால ஏற்பாடு ஒன்று தேவை.எதிர்க்கட்சிகள் அப்படிப்பட்ட ஓர் இடைக்கால ஏற்பாட்டுக்குத் தயாரா? நாடாளுமன்றத்தில் இப்பொழுதும் தாமரைமொட்டுக் கட்சி பலமாகக் காணப்படுகிறது. எனவே ஒரு புதிய இடைக்கால ஏற்பாட்டுக்குப் போவது என்றால் தாமரைமொட்டுக் கட்சியின் ஆதரவு தேவைப்படும்.அதனால் தாமரைமொட்டுக் கட்சியின்மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய தேவை உண்டு.
ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றம் போன்றவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டார்கள்.எனினும் பௌத்த மகாசங்கம், சட்டத்தரணிகளின் அமைப்பு போன்றன அதற்கு ஆதரவாகக் காணப்படவில்லை.நாடாளுமன்றத்தை செயலிழக்க செய்வது என்பது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை செயலிழக்க செய்வதுதான்.
மாற்றீடாக வைத்திருக்கும் கட்டமைப்பு
பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை நம்பவில்லை என்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு மாற்றீடாக வைத்திருக்கும் கட்டமைப்பு என்ன? குமார் குணரட்ணம் கூறுகிறார்,மக்கள் அதிகார மையங்களை ஏற்படுத்துவோம் என்று. அந்த மக்கள் அதிகார மையங்கள்,பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை பிரதியீடு செய்யுமா? நாட்டில் இப்போதுள்ள பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பு பொருத்தமானது அல்லவென்றால் பொருத்தமான ஒரு முன்மாதிரியான கட்டமைப்பை ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டியெழுப்ப வேண்டும்.ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அமைப்புகள் மத்தியில் அது தொடர்பான விழிப்பு ஏதும் இருக்கிறதா ?
குமார் குணரட்ணம் கூறுகிறார் அது நான்காவது அதிகாரம் என்று.”இந்தப்பலம் உயிரோட்டமானது.நிறைவேற்று அதிகாரம்,நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் என்ற மூன்று அதிகாரத் தூண்களுக்குப் மேலதிக புதிய மக்கள் போராட்டம் என்ற அதிகார தூண் உருவாகியுள்ளது.இது மக்களின் இறையாண்மைப் பலம்.இந்தப்பலத்திற்கு பதிலளிக்காது,வளைந்து கொடுக்காது,பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்ற போர்வையில் இதுவரை விளையாடி வந்தனர். எனினும் தற்போது மக்களின் இறையாண்மை பலம் நேரடியாக செயற்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தப்பலத்தை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்”என்று குமார் கூறுகிறார்.
அவர் கூறுவதில் உண்மை உண்டு. நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை மக்கள் மீளப் பெற்று விட்டார்கள்.புதிய மக்கள் அதிகாரத்தின் விளைவாகத்தான் ராஜபக்சக்கள் துரத்தப்பட்டார்கள்.ஆனால் கேள்வி என்னவென்றால் இந்த மக்கள் அதிகாரத்தை பிரதிநிதித்துவ ஜனநாயகம் அல்லாத வேறு எந்த வழிகளில் பிரயோகிப்பது?அல்லது இது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதோடு சரியா? இப்பொழுது மக்கள் எழுச்சிகள் திருப்புகரமான இடத்துக்கு வந்துவிட்டன.இந்த எழுச்சிகளின் விளைவுகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு தூலமான கட்டமைப்புக்களாக மாற்றத்தவறினால் இந்த எழுச்சியின் கனிகள் அனைத்தும் மேற்கு நாடுகளின் சட்டைப்பைக்குள் போய்விடும்.
ஏற்கனவே கடந்த ஒன்பதாம் திகதிக்கு முன்புவரை தன்னெழுச்சிப் போராட்டத்தின் கனிகளை ரணில் தன்னுடைய சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டுவிட்டார். கடந்த மூன்று மாதகால மக்கள் எழுச்சிகள் யாவும் ஒரு மையத்தில் இருந்து நெறிப்படுத்தப்படவில்லை.மேலிருந்து கீழ்நோக்கிய ஒரு மையத் தலைமைத்துவம் அங்கே கிடையாது.அப்படி ஒரு மையத் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதும் கடினம் என்று தெரிகிறது.ஏனென்றால் “அரகலிய” எனப்படுகின்ற மக்கள் எழுச்சியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட அமைப்புக்களின் பங்களிப்பு உண்டு.அந்த அமைப்புகள் மத்தியில் தீவிர இடதுசாரிகள் தொடக்கம் தீவிர வலதுசாரிகள் வரை எல்லாத்தரப்பும் உண்டு.லிபரல்கள் உண்டு. தன்னார்வலர்கள் புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள், படைப்பாளிகள், மதகுருக்கள் என்று பலதரப்புகளும் இணைந்த கதம்பமான ஒரு சேர்க்கை அது.
தலைவர்கள் இல்லாத மக்கள் எழுச்சி
இந்த எல்லாத் தரப்புகளையும் ஒரு பொதுச் சித்தாந்தத்தின் கீழ் ஒருங்கிணைப்பது கடினமானது.அதுதான் அந்தக்கட்டமைப்பின் பலமும். அதுதான் அந்தக் கட்டமைப்பின் பலவீனமும்.அந்த பலவீனத்தின் விளைவுகளை இனி போராட்டக்காரர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். கடந்த மூன்று மாதகாலப் போராட்டத்தில் பொதுமக்களின் நம்பிக்கைகளை வென்றெடுக்கவல்ல தலைமைகள் மேலெழவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இருந்து பேச்சாளர்கள் சிலர் வெளித்தெரிய வந்திருக்கிறார்கள். ஆனால் தலைவர்கள் என்று வர்ணிக்கத்தக்க யாரையும் காண முடியவில்லை.
தலைவர்கள் இல்லாத மக்கள்எழுச்சி எதில் போய் முடியும்? நிறுவனமயப்படுத்தப்பட்ட,தெளிவான இலக்குகளைக் கொண்ட,ஒரு தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்படாத மக்கள் எழுச்சிகள் ஒன்றில் நீர்த்துப் போகும்,அல்லது திசை மாற்றப்படும்,அல்லது அவற்றின் கனிகளை யாராவது கவர்ந்து சென்று விடுவார்கள். ஒரு மையத்தின் கீழ் கட்டமைக்கப்படாத மக்கள் எழுச்சிகள் அவை என்பதனால்தான் அங்கே ஊடுருவல்கள் நிகழ்கின்றன.ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பிரிவினைகள் தூண்டி விடப்படுகின்றன.
மோதல்கள் இடம்பெறுகின்றன.அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் முடிவு யாரால் எடுக்கப்பட்டது? என்ற கேள்வி உண்டு. எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இருந்து துலக்கமான தலைமைகளோ,பலமான நிறுவனக்கட்டமைப்போ உருவாகாதவரை இந்த ஆர்ப்பாட்டங்களின் முடிவில் பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்புகள் செயலிழக்கும்பொழுது அவற்றை மாற்றீடு செய்வது யார்? எதன்மூலம் மாற்றீடு செய்வது? பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு முக்கிய முன் நிபந்தனை ஒரு ஸ்திரமான அரசாங்கம்.
அரசாங்கம் ஸ்திரமிழக்கும்பொழுது பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும். இதில் தமிழ்த்தரப்பின் நோக்குநிலையில் இருந்து பார்த்தால்,யாப்பும் நாடாளுமன்றமும் ஏறக்குறைய செயலிழந்து காணப்படும் ஒரு காலகட்டத்தில் யாப்பை தமிழ் நோக்குநிலையில் இருந்து பல்லினத்தன்மை மிக்கதாக கட்டி எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை விட்டுக்கொடுப்பின்றி இறுக்கமாக முன்வைக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது.ஒரு இடைக்கால ஏற்பாட்டில் தமிழ்த்தரப்பு பங்களிப்பதா இல்லையா என்ற விவாதங்களைவிடவும் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பரப்பு அது.