வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக தவறிய ரணில்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு
அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகள் குறித்த இறுதி முன்னேற்ற அறிக்கையை வரும் ஜூலை மாதம் 8ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் முதல் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி திலக் மாரப்பன, தனது கட்சிக்காரர் உடல்நலக்குறைவு காரணமாக இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது எனத் தெரிவித்ததுடன், அது தொடர்பான மருத்துவ அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்திற்கொண்ட நீதவான், முதல் சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்குத் தாமதமின்றி விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கான சான்று
அத்துடன், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைத் தொடர்வதற்குப் போதுமான சான்றுகள் இருப்பதாக எதிர்பார்ப்பதாகவும் நீதவான் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதில் ஏதேனும் தாமதங்கள் காணப்படின், அதற்கான காரணங்கள் முறையாக ஆராயப்பட்டு அது குறித்துத் தாமதமின்றி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை குறித்த மேலதிக நகர்வுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஜூலை 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கையைத் தொடர்ந்து தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |