ரணிலின் அரசாங்கத்தில் இணையுமா சஜித் தரப்பு..! வெளியான முடிவு
அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறிய ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவதில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குள் நியமிக்கப்படும் நாடாளுமன்ற குழுக்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது.
இன்று கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு மற்றும் அதன் செயற்குழு ஆகியவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
அவசரகால பிரகடனத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவினால் பதில் அதிபராக இருந்த பொழுது பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால பிரகடனத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அவசரகாலச் சட்டம் பிரகடனம் நாளை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
சட்ட விதிகளின்படி, மேற்படி பிரகடனத்திற்கு 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படாவிட்டால், அது ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
