பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய பாதாள உலகக் குழுவை ஒடுக்கும் வேலைத்திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (28) அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் அச்சுறுத்தலாக உள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மக்களின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
பாதாள உலகக் குழுவை ஒடுக்கும் வேலைத்திட்டம்
தற்போது நாட்டில் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக போதைப்பொருள் தொடர்பாகவே அவர்கள் தங்களுக்குள் குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொள்கின்றனர்.
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்ய எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.