'அன்று ரணிலை தூற்றினோம்..! ஆனால் இன்று' - மார்தட்டும் மகிந்த
அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருப்பதால் தற்போது நல்வழிப்படுத்தப்பட்டுள்ளாரென கட்சியின் அதிபரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி சிறிலங்கா பொதுஜன பெரமுன புறங்கூறி இருந்தாலும் கூட, தற்போது அவர் நல்லவர் எனக் கருதி அவரை ஏற்றுக் கொண்டிருப்பதாக களுத்துறையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “சிறிலங்கா பொதுஜன பெரமுன தற்போது பல சவால்களை எதிர் நோக்குகிறது. அவற்றை வென்று வர எம்மிடம் போதுமான பலம் உள்ளது.
ரணில் அரசாங்கத்திற்கு முழு ஆதரவு
மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுக்கும். பொது மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதே அரசாங்கத்தின் கடமை.
இலங்கையின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான ஆதரவை வழங்க சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த காத்திருக்கிறது.
இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் உறுப்பினர்கள் முழு ஆதரவையும் வழங்குவார்கள்” என்றார்.
YOU MAY LIKE THIS
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)