வடக்கு - கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ரணில் சந்திப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிபர் செயலகத்தில் இன்று (21) பிற்பகல் 3 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.
எனினும் குறித்த சந்திப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டம்
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் அதிபரால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும் என க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இறுதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பையடுத்து நாடு திரும்பிய அதிபர் வடக்கு - கிழக்கு தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |