கனடாவின் முன்னாள் பிரதமருடன் ரணில் சந்திப்பு
இலங்கையில் நிலவும் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை செப்டம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க, கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்றின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாடு தற்போது எதிர்நோக்கி வரும் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்துடன் இணைந்து விரிவான மூலோபாயத் திட்டம் உருவாக்கப்படும் என்றும், அங்கு கடன் மறுசீரமைப்பிற்கு முன்னுரிமை அளிப்பதுடன், முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் தனது முதன்மை கவனம் செலுத்துவதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார தாராளமயமாக்கல்
அதேவேளை, ஸ்டீபன் ஹார்பர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அதிபர், தான் அதிபராக பதவியேற்றது, நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கே ஆகும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொள்கை வேலைத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் என்பன தொடர்பிலும் அவர் விரிவாக விளக்கமளித்துள்ளார்.
மேலும், இலங்கையின் நிதி வாய்ப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் நீண்டகாலத்தில் சாதகமான வர்த்தக சமநிலையை ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்த அதிபர், பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை விரைவுபடுத்துதல் மற்றும் முதலீட்டு ஈர்ப்பை அதிகரிக்கும் நோக்குடன் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
