தேர்தலின் பின்னரான கணக்கு வாக்கெடுப்பு : ரணில் விடுத்துள்ள பணிப்புரை
அதிபர் தேர்தலின் பின்னர் உடனடியாக கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிக்க தயாராக இருக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த பணிப்புரையானது நிதி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதி
இதனடிப்படையில், அவர் மேலும் தெரிவி்க்கையில், “சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப இந்த கணக்கு வாக்கெடுப்பு இருக்க வேண்டும்.
அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் இருக்காது.

எனவே, தற்காலிக ஏற்பாடாக கணக்கு வாக்கெடுப்பை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதிபர் விளக்கமளித்துள்ளார் அத்தோடு தேர்தல் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக தேவையான ஏற்பாடுகளை அதிபர் செய்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த பணியாளர் மட்ட உடன்படிக்கையை பிரச்சினைகள் இன்றி எட்டுவதை உறுதிப்படுத்த இலக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் செலவு
நிதி அமைச்சகத்தின் தகவல்களின்படி, அரசாங்கத்தின் செலவுகளை மாத்திரம் காட்டும் கணக்கு வாக்கெடுப்பு பொதுவாக மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அதை நீடிக்க முடியும்.

இதுவரை அதிபர் தேர்தலுக்கு மாத்திரமே திறைசேரி பணம் ஒதுக்கியுள்ளதோடு தேவைப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒதுக்கீட்டை கணக்கு வாக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ள முடியும்.
மேலும், கணக்கு வாக்கெடுப்பு பொதுத் துறையின் சம்பளம் மற்றும் அரசாங்க சேவைகளின் பராமரிப்பு செலவுகளை ஈடுசெய்யும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 4 மணி நேரம் முன்