புலம்பெயர் தமிழர்களுக்காக நாடகமாடும் ரணில்
யானை, மொட்டை விரட்டியடிக்க நாட்டு மக்கள் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய பிரஜை முன்னணியின் ஏற்பாட்டாளர் சமீர பெரேரா, 13ஆவது திருத்தம் தொடர்பான அதிபர் ரணிலின் நாடகங்களைப் பார்த்து தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
ஹட்டனில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மக்கள் ஆணையால் அதிபராகவில்லை
அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆணையால் அதிபராகவில்லை. 134 எம்.பிக்களே அவரை அதிபராக்கினார்கள். நான் ஒரு சிங்கள பௌத்தனாக இருந்தாலும் நாட்டைப் பிளவுபடுத்த விரும்பவில்லை.
ஆனால், 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் எனவும் ரணில் கூறியிருக்கிறார். ரணிலின் இந்த நாடகங்களுக்கு மக்கள் ஏமாறப்போவதில்லை. ரணிலின் இதுபோன்ற நாடகங்களை மொட்டும், யானையுமே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் ஏமாறப்போவதில்லை
இந்தியாவுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்காகவும் ரணில் இந்த நாடகத்தை ஆடுகிறார். முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை காலந்தாழ்த்த சதிகளை செய்து கொண்டு, இப்போது தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களையும் அச்சுறுத்தி வருகிறார்.
ரணிலின் இந்த
நாடகங்களைப் பார்த்து, தமிழ்
மக்கள் ஏமாறப்போவதில்லை.
தமிழ் மக்களினது கட்சிகளில்
உள்ள வயதானவர்களே,
ரணிலின் இந்த நாடகங்களை
நம்புவார்கள் என்றும் அவர்
மேலும் தெரிவித்தார்.