ரணிலின் நடத்தை தொடர்பில் விளக்கம் கோரும் சஜித்!
சபாநாயகரும் எதிர்க்கட்சித் தலைவரும் சபையில் இல்லாத போது ரணில் விக்ரமசிங்க பல விடயங்களை முன்வைத்துள்ளார் இதனால் நாட்டுக்கு தவறான செய்தி செல்லக் கூடும் என்பதால் இது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு சில தவறான கருத்து எடுத்துரைப்புகள் குறித்து திருத்தங்களை முன்வைத்து இன்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவையின் இறுதி நியமனத்தை மேற்கொள்ளாமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரை சாடி அதிபர் குற்றம் சாட்டினார் என்றும், இந்நியமனம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது அரசியலமைப்பின் 41 (ஏ) உறுப்புரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இறுதி நியமனம் தொடர்பான பொறுப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் பெயரை பரிந்துரைத்தது என்றும், ஏன் இந்நியமனத்தை மேற்கொள்ளவில்லை என தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவியுள்ளோம்.
எனவே இறுதி நியமனம் தொடர்பான பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவருக்கு இல்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்றைய தினம்,சபாநாயகரும் எதிர்க்கட்சித் தலைவரும் சபையில் இல்லாத போது அரசியலமைப்பு பேரவைக்கு மாறாக தெரிவுக்குழுவை நியமிக்க அதிபரால் யோசனை முன்மொழியப்பட்டது.
ரணிலுக்கு இத்தகைய அதிகாரம் இல்லை என்றும், நிறைவேற்று அதிகாரத்தின் அதிகாரங்களை ஓரளவிற்கு குறைக்கும் வகையில் தடைகள் மற்றும் சமன்பாடுகளை ஏற்படுத்தவே அரசியலமைப்பு பேரவையுள்ளதாகவும், ரணில் விக்ரம்சிங்கவிற்க்கு இவ்வாறான செல்வாக்கை செலுத்த முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |