அதிபர் ரணிலை ஏமாற்றிய அரசியல் தலைவர்கள்!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) மட்டக்களப்பு விஜயம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
மட்டக்களப்பு (Batticalo) மாவட்டத்திற்கான விஜயத்தின் போது, திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கான விஜயத்தை ரணில் விக்ரமசிங்க இரத்துச் செய்தது முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலக திறப்பு விழா வரை பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க இரண்டாவது தடவை நாடாவெட்டி திறந்து வைத்தமை சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அரசியல் தலைவர்கள்
மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகம் திராய்மடு பகுதியில் கடந்த யூன் மாதம் 10,ம் திகதி திங்கட்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முதளிதரனால் நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் யூன் மாதம் 22 ம் திகதி சனிக்கிழமை அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மீண்டும் ஒருமுறை நாடா வெட்டி அதே மாவட்ட செயலகத்தை திறந்து வைத்தது அரசியலுக்காக ஒரு நாட்டின் அதிபரையே மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் ஏமாற்றினாரா? அல்லது அதிபர் நாட்டு மக்களை ஏமாற்றினாரா? என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே இது போன்ற செயற்பாடுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அதே சம்பவத்தை நாட்டின் அதிபரையே செய்துள்ளமை பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்துக்களை புறக்கணித்த அதிபர்
இதேவேளை மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் காத்தான்குடி அல் அக்சா பள்ளிக்கு விஜயம் செய்த அதிபர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு திருச்செந்தூர் ஆலயத்திற்கான விஜயத்தை புறக்கணித்தமை இந்துக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு திருச்செந்தூர் ஆலயத்தில் அதிபர் வருகையை எதிர்பார்த்து இந்தியாவில்(India) இருந்து வருகைதந்த சமயப் பெரியார்கள் பலர் காத்திருந்த நிலையில் திடீரென திருச்செந்தூர் ஆலயத்திற்கான விஜயத்தை இரத்துச் செய்தது ஏன் என்ற கேள்வி இந்துக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இராஜாங்க அமைச்சர்களின் வீடுகளுக்கு சென்ற அதிபரால் இந்து ஆலயம் ஒன்றிற்கு செல்லமுடியாமல் போனது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |