அதிகரிக்கும் கொரோனா தொற்று- கோட்டாபயவிடம் ரணில் முன்வைத்துள்ள கோரிக்கை
அதிகரித்துச் செல்லும் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபயவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் விசேட விவாதத்தைக் கோர நடவடிக்கை எடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சுட்டிக்காட்டினார், எனினும் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டுவது ஆபத்தானது. எனவே, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர்களுடன் கலந்துரையாடுவது மிகவும் பொருத்தமானது.
இதன் மூலம் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்க முடியும் என்றும், கட்சிகளின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று அனைவரின் பங்கேற்புடன் தொற்றுநோய் நிலைமையை ஒடுக்க முடியும் என்றும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வைரஸ் வேகமாக பரவுவதையும், நாளொன்றுக்கு அதிகரித்து வரும் இறப்புகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு, பேரழிவைத் தணிப்பதற்கான தொடர்ச்சியான திட்டங்களையும் ஐ.தே.க முன்வைத்துள்ளது.