ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் பிரதமர் ரணில் முன்வைத்த கோரிக்கை!!
நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு , அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று விசேட அறிக்கையை வெளியிட்ட பிரதமர் குறித்த அறிக்கையில் இதனை தெரிவித்தார்.
குறித்த அறிக்கையில், " நாடு முழுவதும் எதிர் கொண்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க நாட்டு பிரஜை ஒவ்வொருவரும் ஒன்றுபட வேண்டும், அரசியல்வாதிகள் மற்றும் மக்களிடம் இருந்து அர்ப்பணிப்பை எதிர்பார்த்துள்ளோம்.
அவ்வாறு காணப்பட்டால் மட்டுமே உலக நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரும். அத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை அரசியல்வாதிகளும், ஒட்டுமொத்த மக்களும் உலகுக்கு நிரூபிக்க வேண்டும்.
தேர்தல் குறித்து பிரதமரின் நிலைப்பாடு
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டவுடன், பொருத்தமான 225 பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், அவர்களை தெரிவு செய்யும் பொறுப்பும் அதிகாரமும் பொது மக்களுக்கு உள்ளது" என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.