ஈராக்கிற்கு அருகே கடலில் தீப்பற்றிய கப்பல்: மர்மச் சம்பவத்தால் பதற்றம் - அவசர எச்சரிக்கை விடுத்த UKMTO
ஈராக்கின் அல்-ஃபாவ் துறைமுகத்திலிருந்து தென்கிழக்கே 63 கடல் மைல் (சுமார் 116.6 கிலோமீற்றர்) தொலைவில் கப்பலொன்றில் தீப்பற்றியுள்ளதாகப் பல்வேறு தரப்புகளிடமிருந்து தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்தச் சம்பவத்தைச் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் கப்பலின் பெயர், தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
கப்பலில் இருந்த பணியாளர்களின் தற்போதைய நிலை, ஏற்பட்ட சேதங்களின் அளவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை
இந்த நிலையில் வடக்கு அரேபிய வளைகுடா வழியாகப் பயணிக்கும் கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுவதுடன், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் தென்பட்டால் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறும் UKMTO அறிவுறுத்தியுள்ளது.

ஈராக்கின் பிரதான எண்ணெய் முனையங்களுக்கு அருகிலுள்ள வடக்கு அரேபிய வளைகுடா கடற்பகுதியில், வர்த்தகக் கப்பல்களைக் குறிவைக்கும் தாக்குதல்களும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.
இதனால், அப்பகுதி கடல்சார் மோதல்கள் இடம்பெறும் அபாயமிக்க வலயமாக மாறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், அல்-ஃபாவ் துறைமுகத்திலிருந்து தென்கிழக்கே 30 கடல் மைல் (சுமார் 55.5 கிலோமீற்றர்) தொலைவில், அடையாளம் தெரியாத ஏவுகணையொன்று தமது கப்பலைத் தாக்கியதாக எண்ணெய் தாங்கிக் கப்பலொன்றின் தலைமை அதிகாரி தெரிவித்திருந்தார்.
எனினும், அந்தச் சம்பவத்துக்கும் தற்போது பதிவாகியுள்ள கப்பல் தீ விபத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |