சிஐடியிலிருந்து வெளியேறிய ரணிலின் செயலாளர்
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (05) காலை 9.30 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
முதலாம் இணைப்பு
அநுர அரசின் அதிரடி : ரணிலின் செயலாளரும் சிஐடிக்கு அழைப்பு
ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க (Saman Ekanayake) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று (05) அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சென்ட்ரோ பெரேராவிடம் (Sandra Perera) குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்றையதினம் (04) 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.
சபையில் அறிவித்த நளிந்த ஜயதிஸ்ஸ
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 23 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்காக சுமார் 1 பில்லியன் ரூபா வரையில் அரச நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அண்மையில் நாடாளுமன்றத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு 4 வெளிநாட்டு பயணம், 2023 ஆம் ஆண்டு 14 வெளிநாட்டு பயணம், 2024 ஆம் ஆண்டு 05 வெளிநாட்டு பயணம் என்ற அடிப்படையில் இக்காலத்துக்குள் 23 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார்.
இக்காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்களின் போது அவருடன் பலர் அரசமுறை விஜயத்தில் பங்கேற்றுள்ளனர். 2022 ஆம் ஆண்டு 63 பேர், 2023 ஆம் ஆண்டு 252 பேர், 2024 ஆம் ஆண்டு 111 பேர் என்ற அடிப்படையில் இக்காலப்பகுதியில் மாத்திரம் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்க செலவில் 436 பேர் வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்றுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு மேற்கொண்ட அரசமுறை பயணத்துக்கு 129 மில்லியன் ரூபா, 2023 ஆம் ஆண்டு 577 மில்லியன் ரூபா, 2024 ஆம் ஆண்டு 300 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் சுமார் 1 பில்லியன் ரூபா வரை அரச நிதி செலவிடப்பட்டுள்ளது.
சென்ட்ரோ பெரேராவிடம் வாக்குமூலம்
இக்காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு பிரதிநிதிகள் குழு 19 அரசமுறை பயணங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு 1027 மில்லியன் ரூபா வரையில் செலவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அண்மையில் அறிவித்திருந்தது.
பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சென்ட்ரோ பெரேராவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக இன்று அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா
