புலம்பெயர் தேசங்களின் எழுச்சியின் மீதான ரணிலின் யுத்தமா...
தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புலம்பெயர் தேசத்தின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நிலத்தில் நடந்த போராட்டத்திற்காக புலத்தில் பல்வேறு வகையிலும் எம் ஈழத் தமிழர்கள் உழைத்தார்கள்.
போராட்டங்களாக இருக்கட்டும், பொருளாதார உழைப்பாக இருக்கட்டும் தாய்நிலத்திற்கா புலம் செய்த பணிகள் என்பவை மகத்தானவை.
அது மாத்திரமின்றி ஈழத் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய இலட்சியப் போராட்டத்தை பன்னாட்டு சூழலில் கொண்டு சேர்க்கும் பணியிலும் புலம்பெயர் தேசத்தின் எழுச்சி பெரும் பங்களிப்பை வளங்கி வருகின்றது.
இந்த நிலையில் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கிய சிறிலங்கா அரசு புலம்பெயர் தேசத்தின் எழுச்சிகளை ஒடுக்க வியூகங்களை வகுகிறதா என்ற அச்சமே இப்போது மேலிடுகிறது.
உலகத் தமிழர் பேரவை
இமாலயப் பிரகடனம் இலங்கைத் தீவில் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான பிரச்சினையும் போராட்டமும் எழுபது ஆண்டுகளை கடந்து நீள்கிறது. இந்த நிலையில் புலம்பெயர் தேசத்தின் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் பேரவை இலங்கையின் பௌத்த பிக்கு குருமார்களுடன் இணைந்து அரசியல் தீர்வொன்றை காண முனைவதாக சொல்லப்படுகிறது.
அந்த அடிப்படையில் கடந்த காலத்தில் தமிழீழத்தை நோக்கிப் பயணித்த, தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்த குறித்த அமைப்பு இன்று சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துள்ளது.
குறித்த அமைப்பின் கீழ் செயற்படும் கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புக்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இமாலயப் பிரகடனம் என்ற பெயரில் இரு தரப்பும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் அரசியல் புலத்தில் தோன்றியுள்ளன.
சுய நிர்ணய உரிமையை கைவிடுதல், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கைவிடுதல், சிறிலங்கன் என்ற அடையாளத்திற்குள் தீர்வை ஏற்றுக்கொள்ளுதல் என்ற நிபந்தனைகள் அல்லது விட்டுக்கொடுப்புக்களின் பின்னணியில் தான் இமாலயப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அப்படி என்றால் அதற்கு இமாலயப் பிரகடனம் என்று பெயர் சூட்டுவது எப்படிப் பொருத்தமாக அமையும்? மலையின் பெயரால் மடுவை காண்பிக்கும் முயற்சியா இது?
புலம்பெயர் அமைப்புக்களுடன் பௌத்தகுமார்கள் இணைந்து தீர்வு முயற்சி பற்றிப் பேசுவதை வரவேற்க வேண்டும் என்று நடுநிலையாளர்கள் கூறுகின்ற போதும், தாயக தமிழர்களின் பங்களிப்பு இன்றி நடக்கும் இந்த நடவடிக்கைதான் பலவேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
தமிழீழத்தை கைவிடும் நிபந்தனையா?
தமிழீழத்தை நாம் கைவிடுகிறோம் என்று உலகத் தமிழர் பேரவை கூறுகிறது, ஆனால் தமிழீழத் தீர்வு எந்தக் காலத்தில் யாரால் முன்வைக்கப்பட்டது என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
1976ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில், ஈழத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், அந்த தீர்மானத்தை மக்கள் ஆணையாகப் பெறும்பொருட்டு, 1977இல் நடந்த தேர்தலில் மக்கள் பெரு ஆதரவு வழங்கினர். இதன் வாயிலாக தமிழீழத் தீர்வு என்பது தமிழ் ஈழ மக்களின் ஆணையாக வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்திற்கும் தாக்கமாக அமைந்திருந்தது
இந்த நிலையில் மக்கள் ஆணை வழியாக பெறப்பட்ட, தனித் தமிழீழ தீர்மானத்தை, புலம்பெயர் தேச அமைப்பொன்று, தாம் விடுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்வது சிக்கலானதே.
அது குறித்த அமைப்பு சார்ந்த முடிவாக இருக்குமே தவிர, தமிழ் மக்களின் தீர்மானமாக இருக்க இயலாது.
இதேவேளை, கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தனிநாட்டுக்கோரிக்கையை – தமிழீழத்தை கைவிடுவதாகவும் சுயநிர்ணய உரிமை கொண்ட தீர்வை, பிளவுபடாத இலங்கைக்குள் முன்வைக்குமாறும் கோரிய போதும்கூட 2009 இனப்படுகொலைக்குப் பிந்தைய காலத்தில் சிறிலங்கா அரசு அதனை சற்றும் கவனம் கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் தாயக தலைவர்களை புறந்தள்ளிவிட்டு எப்படியான தீர்வு முயற்சியை சிறிலங்கா அரசு தரப் போகிறது என்ற சந்தேகம் எழுகிறது.
தலைவர் பிரபாகரனின் கோரிக்கை
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன் செயலாலும் அமைதியாலும் புன்னகையாலும் வருடத்திற்கொரு முறை நிகழ்த்தும் உரையாலும் இலட்சியம் நோக்கி ஈழ மக்களை பயணிக்கச் செய்தவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.
அவர்மீது கொண்ட நம்பிக்கைமிகு பேரன்பினாலும் தாயக விடுதலைமீது கொண்ட பெருந் தாகத்தினாலும் புலம்பெயர் தேச மக்கள் அங்கிருந்து பல்வேறு வகையான செயற்பாடுகளையும் உழைப்புக்களையும் முன்னெடுத்தார்கள்.
களத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில், புலம்பெயர் மக்கள் பனியிலும் நெருப்பிலும் உழைத்த உழைப்பு விடுதலைப் போராட்டத்தை தாங்கி நகர்த்தியது என்பதை யாவரும் அறிவோம்.
இந்த நிலையில், ஈழத் தமிழ் மக்களின் விடுதலை மற்றும் உரிமை குறித்தும் இன ஒடுக்குமுறையை தடுக்கும் நீதி குறித்தும் புலம்பெயர் தேசத்தில் முன்னெடுக்கும் செயற்பாடுகளும் போராட்டங்களும் பன்னாட்டுச் சூழலில் பெரும் புரிதல்களை ஏற்படுத்தி அரசியல் மாற்றங்களை நிகழ்த்தக் கூடியவை.
இதனால் 2008 மாவீரர் தின உரையின் போது ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து தாங்கிச் செல்ல புலம்பெயர் தேசங்கள்மீது மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அழைப்பு விடுத்திருந்தார்.
அத்துடன் இளைய சமூகத்தினரை குறிப்பாக அழைத்து பொறுப்பேற்க வேண்டும் என்றும் தலைவர் அழைப்பு விடுத்தமை, புலம்பெயர் தேசத்தின் எழுச்சியின் அவசியத்தை உணர்த்துகின்ற கால முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாகும்.
புலம்பெயர் அமைப்புக்களை சிதைக்கவும் அழிக்கவுமா?
தாயகத்தில் உள்ள தமிழ் தரப்புக்களை சிதைப்பதில் சிறிலங்கா அரசு வெற்றி கண்டு வருகின்றது. குறிப்பாக 2002 சமாதான ஒப்பந்த காலத்தில் விடுதலைப் புலிகள் தீர்வை சமாதானத்தின் வழியாக முன்வைக்க ஒரு வாய்ப்பை திறந்தபோது, சிறிலங்கா அரசு தன்னை போருக்குத் தயார்படுத்தியதுடன், விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டது.
அதன் அடிப்படையில்தான் கருணா அம்மான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து செல்லும் நிலை உருவாக்கப்பட்டது.
இதனை தான் பெற்ற போர் வெற்றியாகவே அன்றைய பிரதமரும் இன்றைய அதிபருமான ரணில் கூறுவதை பார்த்திருக்கிறோம்.
அதேபோன்று 2015இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றதுடன் அக் கட்சிக்குள் சில பிளவுகளை உருவாக்கவும் ரணில் காய்களை நகர்த்தியிருந்தார்.
இந்த நிலையில் புலம்பெயர் தேச அமைப்புக்களை சிதைக்கவும் அழிக்கவுமான அடுத்த யுத்தத்தை ரணில் தொடங்கியுள்ளாரா? அதுதான் இமாலயப் பிரகடனமா? உலகத் தமிழர் பேரவைமீது புலம்பெயர் தேச மக்களும் தாயக மக்களும் பல்வேறு அதிருப்திகளையும் எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தத் துவங்கியுள்ளனர்.
அதேபோன்று கனேடியத் தமிழ் காங்கிரஸ் போன்றவையும் சிக்கலை எதிர்நோக்கத் துவங்கியுள்ளன. இப்படியான செயற்பாடுகள் வழியாக புலம்பெயர் தேசத்தில் அனைத்து தமிழர் அமைப்புகள்மீதும் மக்களின் எதிர்ப்பை ஏற்படுத்துவதான் ரணில் அரசின் இலக்கா?
இந்த அரசியலை புரிந்துகொண்டு புலம்பெயர் தேச அமைப்புக்கள் தமிழர்களுக்கான இலட்சியத் தீர்வுக்கும் இனவழிப்புக்கான நீதிக்குமாக தமது பயணத்தை செழுமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 27 December, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.