மொட்டுக்கட்சியை ஆதரிக்க மாட்டோம்! டக்ளஸ் தரப்பு ஆணித்தரம்
அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாறாக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது கட்சியின் ஆதரவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுவதுக்கு முன்னர் வடமராட்சியில் ஆபரேஷன் லிபரேசன் என்னும் இராணுவ நடவடிக்கை நடந்தபோது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ராமச்சந்திரன் என்ற எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தார். அதேபோன்று மத்தியில் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தார்.
இந்திய கடற்படை
அன்று வடமராட்சி பிரதேசத்தில் முழுமையாக இராணுவம் கைப்பற்றியதன் பின்னர் தொடர்ச்சியாக இராணுவம் ஏனைய இடங்களையும் கைப்பற்ற முனைந்தது. இதனால் எமது அரசியல் உரிமை அடியோடு அற்றுப்போகும் என்ற நிலைப்பாடு உருவானது.
இந்நிலையில் வடமராட்சி பிரதேச மக்களுக்கான உணவுப் பொருட்களை இந்திய கடற்படை கப்பல்கள் கொண்டு வந்தன. இலங்கை கடற்படை அவற்றை திருப்பி அனுப்பியது. ஆனால் இந்திய அரசு ஒதுங்கியிருக்கவில்லை.
இந்தியாவின் மிராஜ் விமானங்கள் தாம்பரம் மீனம்பாக்கம் போன்ற பகுதியில் இருந்து புறப்பட்டு இலங்கையின் வடக்கே வடமராட்சி பிரதேசத்தில் மட்டுமல்லாது குடாநாடெங்கும் உணவுப் பொட்டலங்களை வீசியதுடன் இலங்கை அரசுக்கும் ஒரு வலுவான செய்தியை சொல்லி சென்றது.
அதாவது தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டால் இந்தியா பார்த்துக் கொண்டிருக்கமாட்டது. என்ற வலுவான செய்தியை தென்னிலங்கை இனவாத அரசுக்கு சொல்லிச் சென்றது. அதன் பின்னர்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவானது.
என்னை நம்புங்கள்
இவை அனைத்தும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் தான் நடந்தேறின. அதன் வலராற்று அனுபவங்களை கொண்டே நாம் சொல்கின்றோம் தற்போதைய அதிபர் ரணில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் எம்மால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தர முடியும்.
அவர் அதை முன்னெடுப்பார் என்று. அதாவது எமது மக்களிடம் எமது கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி சொல்வார்.
நீங்கள் ரணிலை நம்பவோ அல்லது நம்ப முடியாதென்ற நிலைப்பாட்டிலோ சிந்திக்க வேண்டியதில்லை. என்னை நம்புங்கள். என்னிடம் உங்கள் அரசியல் அதிகாரத்தை தாருங்கள். நான் மக்களது அடிப்படை பிரச்சினைகள் மட்டுமல்லாது அரசியல் உரிமை பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தருவேன் என்று.
அமைச்சரது இந்த உறுதியான நம்பிக்கைக்கு மக்கள் செவிசாய்த்தால் நிச்சயம் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வுகளும் கிடைத்தே தீரும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |