மீண்டும் நாடாளுமன்றத்திற்கு ரணில்...! அம்பலப்படுத்தும் எம்.பி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாடாளுமன்றம் செல்லக் கூடிய சூழலை தேசிய மக்கள் சக்தி அரசே உருவாக்கிக் கொடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை பிரதேசத்தில் நேற்று (7) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "சமூகத்தில் கிடைக்கும் வெற்றியை நாட்டுக்கான வெற்றியாக மேம்படுத்த வேண்டும். எம்மால் உருவாக்கப்படுவதை யாராலும் தகர்த்துக் கொண்டு செல்ல முடியாது.
ஊழல் குற்றச்சாட்டுக்கள்
அவ்வாறு தகர்த்தால் அது நாட்டின் நன்மைக்காகவே இருக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவமும் அக்கட்சியும் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன என்பதை முழு நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியை கைவிட்டுத் தான் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள், அதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே அவற்றுடன் தொடர்பற்றவர்கள் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியைக் கட்டியெழுப்பினர்.
ஆனால், இன்று என்ன நடந்துள்ளது? ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிதாக கூறுவதற்கு எதுவும் இல்லை.
நாட்டுக்கு அரசியல் ரீதியில் அநீதி
அவற்றில் பிரதானமானது மத்திய வங்கி பிணைமுறி மோசடியாகும். ஆனால், இன்று இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போது பிரதமரால் அந்தக் குற்றச்சாட்டு மறுக்கப்படுகின்றது.
இவற்றின் மூலம் வாக்காளர்களான மக்கள் உண்மை நிலைவரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டுக்கு அரசியல் ரீதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ஷக்கள் தொடர்பில் கடுமையான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் இன்று ரொக்கட் மூலம் நட்டம் ஏற்படவில்லை, இலாபம் கிடைத்ததாகக் கூறுகின்றனர்.
இதனால் இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கான நீதியைப் பெறுவதற்கு ஐ.தே.க., ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து பயணிக்க வேண்டும். ரணிலா, சஜித்தா என்ற போட்டிக்கு அப்பால் இந்தக் கூட்டணி நாட்டுக்கானதாக அமைய வேண்டும்.
மீண்டும் நாடாளுமன்றம்
அதனை விடுத்து இதன் மூலம் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சித்தால் அதனை அனுமதிக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ளதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை.
ஆனால், அவர் நினைத்தால் மீண்டும் நாடாளுமன்றம் செல்வதற்கான சூழலை உருவாக்க முடியும். அவர் இதற்கு முன்னர் நாடாளுமன்றம் சென்று பிரதமராகி பின்னர் ஜனாதிபதியானதன் பின்னர் ஊழல், மோசடிக்காரர்கள் பாதுகாக்கப்பட்டனர் என ஜே.வி.பி. குற்றம் சுமத்தியது.
ஆனால், இன்று வரை அவற்றை நிரூபித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஜே.வி.பி. அரசு தவறியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் இருந்த கோப்புக்கள் இன்று இல்லை.
அதேவேளை, ரணில் நாடாளுமன்றம் செல்லக் கூடிய, அவரைச் சுற்றி பலமான சக்திகள் உருவாகக் கூடிய சூழலை இந்த அரசே உருவாக்கிக் கொடுத்தது.
ரணில் பொறுப்பேற்றுக் கட்டியெழுப்பினார்
மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரை மக்களே மீண்டும் தேடும் சூழல் ஏற்படுவதற்கு அரசின் செயற்பாடுகளே காரணம். எவ்வாறிருப்பினும் நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய இயலுமை சஜித், ரணில் தரப்புக்கள் இணைந்தால் மாத்திரமே சாத்தியமாகும்.
மகிந்த, கோட்டா, பசிலால் முடியாமல் போன, அநுர பொறுப்பேற்காத நாட்டை ரணில் பொறுப்பேற்றுக் கட்டியெழுப்பினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
எனவே, அவரது அனுபவம், அறிவைப் பெற்ற சஜித், ஹர்ஷ, எரான், கபிர் உள்ளிட்ட குழுவினரால் நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். எவ்வாறிருப்பினும் அதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இடம்பெற வேண்டிய மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்." - என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா
