ரணிலை கைது செய்யாதது ஏன்? மூடி மறைக்க சூழ்ச்சியா?
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஏன் கைது செய்யவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்றைய தினம் கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டுமன்றி அதன் பிரதான சூத்திரதாரியான ரணில் விக்ரமசிங்கவையும் கைது செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மோசடியுடன் தொடர்புடைய ரணில் உள்ளிட்ட முக்கிய சூத்திரதாரிகளும் கைது செய்யப்பட வேண்டுமேன அவர் தெரிவித்துள்ளார்.
சீனி மோசடி பாரதூரமான ஓர் நிலைமையாகும் எனவும் நாட்டு மக்களுக்கு உணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகள் பாடசாலை செல்ல முடியாதுள்ளது எனவும் அவ்வாறு போனாலும் பாதுகாப்பு கிடையாது எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு நாட்டில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை மூடி மறைத்துக் கொள்ளும் நோக்கில் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிணை முறி மோசடிகளைப் போன்றே சீனி இறக்குமதி வரி ஊடாகவும் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இதனை மூடி மறைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருடர்களை பிடிப்பதற்கு எவ்வித தடையும் கிடையாது எனவும் எந்த அரசாங்கம் என்றாலும் திருடர்கள் கைது செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கைதுகள், அடுத்த மாகாணசபை வெற்றியை இலக்கு வைக்கும் பிரச்சாரமா என்ற கேள்வி எழுவதாகவும் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.