தேர்தலில் களமிறங்கும் ரணில் விக்ரமசிங்க : எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ள ஹரின் பெர்ணாண்டோ
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் வேட்பாளராக களமிறங்குவார் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, ரணில் விக்ரமசிங்க இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக போட்டியிடுவாரா இல்லையா என்பது தொடர்பில் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
வேட்பாளர் தொடர்பில் சவால்
ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக மாட்டார் என கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் நான் சவால் விடுக்க விரும்புகிறேன்.
அவர் நிச்சயம் வேட்பாளராக போட்டியிடுவார். இது தொடர்பில் நாம் பேச்சுக்களை முன்னெடுக்காத காரணத்தால் அமைதியாக உள்ளோம்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்காத காரணத்தால் ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார் என பலர் நினைக்கிறார்கள்.
பிளவுபட்டுள்ள எதிர்க்கட்சி
எதிர்கட்சி பிளவுபட்டுள்ளதால் ரணில் விக்ரமசிங்கவிற்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
எதிர்க்கட்சி பலவீனமடைந்துள்ளதால் தற்போது ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
எனினும், இரு கட்சிகளினதும் தலைவர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவின் வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கும்.
சிறிலங்காவின் அதிபர்
சிறிலங்காவின் அதிபராக பதவியேற்ற மிக குறுகிய காலத்தில், அவர் நாட்டில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
மக்கள் நெருக்கடிகளை ஏதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், எதிர்காலத்தை குறித்த ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |