2030 வரை ரணிலே அதிபர்..! பாலித ரங்கே பண்டார சூளுரை
நாட்டின் அதிபராக எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கவே பதவி வகிப்பார் அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
விலகி சென்ற எவரும் வெற்றியடையவில்லை
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்று உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரையில் வெற்றி பெற்றதில்லை. அதே போன்று எந்தவொரு அரசியல் தலைவரும் வெற்றியடைந்ததில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் பேசுவது பிரயோசனமற்றது. ஏனைய கட்சிகளுக்கும் அதே நிலைமையே ஏற்படும்.
நாட்டில் பல்வேறு பௌத்த மகா சங்கங்கள் காணப்படுகின்ற போதிலும் , மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் தொடர்பிலேயே அனைவரும் பேசுகின்றர்.
அதே போன்று தான் இலங்கையிலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகியவை மாத்திரமே ஸ்திரமான கட்சிகளாகவுள்ளன.
ரணிலின் நோக்கம்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனித்துச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க முடியும். எவ்வித பேதங்களும் இன்றி அனைவரையும் அதிபருடன் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இன, மத, மொழி பேதமின்றி அனைவருடனும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும்.
