அதிபர் ரணிலின் முதல் வெளிநாட்டு பயணம்
மக்கள் புரட்சியை அடுத்து நாட்டிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கான வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பதில் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, பின்னர் நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு கட்டமாக, அதிபராக பதவியேற்ற அவர் முதலாவதாக அடுத்த மாதம் ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இரு தரப்பு கடன் மறு சீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.
இதேவேளை அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜப்பான் பிரதமர் தனது வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.
இலங்கையில் அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பதவியேற்கும் ஒருவர் முதலில் இந்தியாவிற்கே விஜயம் செய்வது வழமை.ஆனால் இம்முறை ரணில் அதை விடுத்து ஜப்பானுக்கு செல்கின்றமை விதிவிலக்காக அமைந்துள்ளது.