முடியாது விட்டால் விலகுங்கள் - ராஜபக்ச அரசுக்கு சவால்
உங்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது விட்டால் எங்களிடம் ஒப்படைத்துவிட்டு விலகுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இன்று நாட்டில் விவசாயிகள் இரசாயன உர இன்மையினால் தமது உற்பத்திகளை விளைத்துக் கொள்ள முடியார் கஸ்டப்படுகின்றனர். நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாடு காரணமாக கறுப்பு சந்தையில் உர விலை 4000 வரை விற்கப்படுகின்றது.
மேலும் களை நாசி, கிருமி நாசி என்பனவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன. இத்தகைய நிலையினால் நெல் உற்பத்தி 100 இற்கு 40 வீதத்தினால் குறைவடையும் என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அப்படியினால் சீனாவிடமிருந்து அரிசியினை இறக்குமதி செய்யவதற்கு அரசாங்கம் சதி செய்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
எக்பிரஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கியமையினால் மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர் கடலுக்கு போகமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அரசாங்கம் மண்ணெண்ணை விலை அதிகரித்துள்ளது.
இது மேலும் விவசாயிகளை பாதிப்படையச் செய்துள்ளது. இந்த நிலையில் ஆட்சியாளர்களினால் சகல துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் சிறந்த இடத்தில் இருந்த இலங்கையின் சுகாதார துறை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆகவே நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டை எம்மிடம் ஒப்படைத்துவிட்டு விலகுமாறு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.