பதின்ம வயதுச் சிறுமி வன்புணர்வு - கைது செய்யப்பட்ட வயோதிபருக்கு விளக்கமறியல்
பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோப்பாய் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகியுள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.
வயோதிபர் கைது
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் காவல்துறையினருக்கும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் காவல்துறையினர் வயோதிபரை கைது செய்தனர்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர் அவரை நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். சிறுமியை தாயாரின் பாதுகாப்பில் வைத்திருக்க அனுமதியளித்து நீதிமன்றம் கட்டளையிட்டது.
பிணை விண்ணப்பம் நிராகரிப்பு
இந்த நிலையில் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் கீழ் முதியவர் இன்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.
பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மன்று, சந்தேக நபரை நாளைமறுதினம் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.