உடனடியாக இடைநிறுத்தவும் : மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சொய்சா (Ranjith Soyza) உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை உடனடியாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
குறித்த தடை உத்தரவானது நேற்றைய (19) தினம் சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன் ரத்தினம் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது இரத்தினபுரியின் (Ratnapura) கொடகவெல பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இரத்தினபுரி மேல் நீதிமன்றம்
மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹாஃபில் பாரிஸ் (Haffil paris) நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்தச் சம்பவத்தில் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாகவும் பின்னர் அது மீளப் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை முதலில் மீளப் பெறப்பட்டதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் அழிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.
அதன்படி உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை சட்டத்திற்கு முரணாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி சம்பந்தப்பட்ட பிரதிவாதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மீள்திருத்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |