இரத்மலானை - மட்டக்களப்பு உள்நாட்டு விமான சேவை மீண்டும் ஆரம்பம்
இரத்மலானையில் இருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாலையடிவட்டை கிராமத்திலுள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய, 12 பேர்ச் காணியை விடுவிக்கவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி உத்தரவு
எனினும், இது போதுமானதல்ல என சுட்டிக்காட்டியதையடுத்து, முழு காணியையும் விடுவிப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் சாணக்கியன் கூறியுள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பு வானூர்தி நிலைய வீதியை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபைக்கு விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கும் அறிவித்தலை, மட்டக்களப்பு விமான படையினருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 5 மணி நேரம் முன்