இராவணனும் நாளை மதம் மாற்றப்படலாம் : திருமலையில் பாஸ்கரன் கந்தையா எச்சரிக்கை!
இன்னும் சில காலங்களில் இராவணன் கூட விலை பேசப்படலாம் அல்லது இராவணன் மதம் மாறக்கூடிய சந்தர்ப்பங்களும் திருகோணமலை மண்ணில் இருப்பதாக தொழிலதிபரும் ஐபிசி தமிழ் ஊடக குழுமத்தின் தலைவருமான பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் சனிக்கிழமை (31) இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் இதயம். வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற இந்த மண் இன்று பல ஆண்டுகளாக தொடர்ச்சியான நில அபகரிப்புக்கள், மத ஆக்கிரமிப்புகள், மத வழிபாட்டுத் தலங்களுக்குரிய அதீத வரவு போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இது எங்களுடைய நிலப்பரம்பலுக்கு மிகப் பெரிய பிரச்சினையாகவும் ஆபத்தாகவும் மாறியிருக்கக்கூடிய இந்தக் கால கட்டத்தில் எங்களுடைய பாரம்பரியங்கள் மற்றும் அடையாளங்களை ஆவணப்படுத்த வேண்டிய கால கட்டத்தில் திருகோணமலை மாவட்டம் முன்னிலையில் இருக்கின்றது.
எங்களுடைய இனத்தினுடைய தொகை வெகுவாகக் குறைவடைந்து வரும் நிலையில், இந்த இனத்தொகை குறைவு எங்களுடைய அரசியல் இருப்பைக் கேள்விக்குறியாக்குகின்றது.
இங்கிருக்கும் மக்கள் எல்லாவற்றையும் உணர்ந்து ஒரு தமிழினம் என்ற ரீதியாக ஒருமித்து பல விடயங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |