குக் தீவுகளில் மூன்று ஆண்டுகளாகத் தவிக்கும் இலங்கைப் பெண்: நாடு திரும்ப முடியாமல் தவிப்பு!
தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக் தீவுகளில், இலங்கையைச் சேர்ந்த 50 வயதுடைய ருச்சிரா ரணசிங்கே என்ற பெண் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்து வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பெண் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறி, நிரந்தரமாகக் குடியேறும் எதிர்பார்ப்புடன் நியூசிலாந்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு அரசியல் தஞ்சம் கோரிய அவர், பின்னர் திறந்த வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரத்தையும் பெற்றுள்ளார்.
இடைநிலைப் பயண விசா
எனினும், வேலைவாய்ப்பு விசாவைப் பெறுவதற்காக வெளிநாட்டிலிருந்து மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனக் குடிவரவு ஆலோசகர் ஒருவர் வழங்கிய தவறான ஆலோசனையை நம்பி அவர் குக் தீவுகளுக்குச் சென்றுள்ளார்.

இதனால், நியூசிலாந்தை விட்டு வெளியேறியதன் காரணமாக ஏற்கனவே நடைமுறையிலிருந்த அவரது விசாவின் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அவர் புதிதாகச் சமர்ப்பித்த விசா விண்ணப்பத்தையும் நியூசிலாந்து குடிவரவு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
மேலும், இலங்கைக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ பயணிப்பதற்குத் தேவையான இடைநிலைப் பயண விசாவை வழங்க நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் மறுத்துள்ளன.
மாற்றுப் பயணப் பாதைகளான ஹவாய் அல்லது தஹித்தி ஊடாகப் பயணிப்பதற்கும், பயோமெட்ரிக் தகவல்களை வழங்குவதற்காக அவர் மீண்டும் நியூசிலாந்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு
இதனால் அவரது பிரச்சினை மேலும் சிக்கலடைந்துள்ளது. இதன் காரணமாக, தனது ஒரே மகனின் திருமணத்தில் கலந்துகொள்ளவும், தாயாரைச் சந்திக்கவும் மிகுந்த ஆவலுடன் இருந்தபோதிலும், கடவுச்சீட்டு மற்றும் இடைநிலைப் பயண விசா இல்லாததால் அவரால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது குக் தீவுகளில் உள்ள விருந்தகம் ஒன்றின் பணியாளர் தங்குமிடத்தில் இலவசமாகத் தங்கியுள்ள அவர், அப்பகுதி மக்களின் உதவியுடனும் தனக்குக் கிடைத்த தையல் இயந்திரத்தின் மூலமாகவும் சிறிய வருமானத்தை வருகிறார் எனப்படுகிறது.
இந்நிலையில், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் நியூசிலாந்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயமும் வெளிவிவகார அமைச்சும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வழங்கப்பட்ட தவறான குடிவரவு ஆலோசனையால் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ள குறித்த பெண்ணின் மனநலமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |