வெளிநாட்டில் உள்ள முன்னாள் பிரதி அமைச்சரை கைது செய்ய சர்வதேச காவல்துறைக்கு அறிவிப்பு
வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர குறித்து சர்வதேச காவல்துறைக்கு (இன்டர்போல்) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
2026 ஒக்டோபர் 21 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவை (சோக்க மல்லி) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் ஒரு திறந்த பிடியாணையை (கண்டதும் கைது செய்வதற்கான ஆணை) பிறப்பித்தது.
காவல்துறை மா அதிபருக்கும் உத்தரவு
குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மூலம் பிடியாணையை நிறைவேற்றுமாறு காவல்துறை மா அதிபருக்கும் உத்தரவிடப்பட்டது. மேலும் சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

இதற்கிடையில், நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, நீதிமன்றத்தில் ஆஜரான இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கஹவத்த பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவர்களை விடுவித்து விடுதலை செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டிருந்தன.

இருப்பினும், பிரேமலால் ஜெயசேகர ஆஜராகவில்லை என்றும், அவர் வெளிநாட்டில் இருப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |