ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூர் அணி படைத்த சாதனை
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இந்த ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றுள்ளது.
2024 ஆம் ஆண்டின் மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் மகளிர் அணியை வீழ்த்தி ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
டெல்லியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதிக ஓட்டங்கள்
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஷபாலி வர்மா (Shafali Verma) அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
பந்து வீச்சில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் ஷ்ரேயங்க பட்டேல் (Shreyanka Patil) 04 விக்கெட்டுக்களையும், சோபி மொலினீஸ் (Sophie Molineux) 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
ஐ.பி.எல் வரலாற்றில்
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் எல்லிஸ் பெரி (Ellyse Perry) அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றதுடன், சோபி டெவின் (Sophie Devine) 32 ஓட்டங்களையும் அணியின் தலைவி ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதி போட்டியில் வெற்றிபெறாத நிலையில், மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அந்த வெற்றியை பதிவு செய்து ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி தமது கனவை நனவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |