இலங்கைத் தமிழ் மக்களுக்கான மனித உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரை போராடத்தயார் - பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பு
இலங்கைத் தமிழ்மக்களுக்கான நீதி மற்றும் மனித உரிமைகள் என்பன உறுதிசெய்யப்படும் வரையில் நாம் அதற்காகத் தொடர்ந்து போராடத்தயாராக இருப்பதாக பிரிட்டன் நாடாளுமன்ற சியோபெய்ன் மெக்டொனாக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவீரர் நாளை முன்னிட்டு காணொளி மூலம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்கள் தொடர்பில் தற்போது வரை எந்தவொரு நபரும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை.
இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட படுகொலைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவை தொடர்பில் நீதியை அடைந்துகொள்வதற்கான முயற்சிகள் தற்போது சர்வதேசத்தை நோக்கி நகரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை அண்மைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடர் வழங்கியிருக்கின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை போரின்போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலருக்கு என்ன நேர்ந்தது என்பதே தெரியாமல்போயிருக்கின்றது என ஸ்டீவ் பேக்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் போரில் உயிரிழந்தவர்களை எவ்வித தடைகளுமின்றி நினைவுகூருவதென்பது மிகவும் முக்கியமானதாகும்.
ஆனால் அது அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் சாத்தியப்படாமை பெரிதும் விசனமளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் மனித உரிமை மீறல்கள் வழக்கமானவையாக மாறிவிட்டன என கெரெத் தோமஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மிகமோசமான சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் தற்போதும் தொடர்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலப்போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரும் இலங்கைவாழ் தமிழ்மக்கள் தொடர்பான நகர்வுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.