வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு ரவிகரன் எம்.பி அளித்த வாக்குறுதி!
வடக்கு - கிழக்கு மாணவர்கள் சிறந்தமுறையில் கல்விகற்பதற்காக உதவிகளை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் புலம்பெயர் உறவுகள் என அனைவரும் தயாராக இருக்கின்றோம் என்று வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்(Thurairajah Raviharan) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - பத்தாம்குறிச்சியிலுள்ள கல்விநிலையமொன்றின் மாணவர்களுடன் இடம்பெற்ற கலந்துறையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,“கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களின் கல்வித்தரம் முன்னிலையில் இருந்தது.
மாணவர்களின் கல்வித்தரம்
ஆனால் தற்போது வடக்கு, கிழக்கில் எமது மாணவர்களின் கல்வித்தரம் குறைவடைந்து செல்கின்ற நிலைகளைக் காண்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும்.
எனவே அனைவரும் கல்விகற்கவேண்டும், சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும், உயர்ந்த நிலைகளைப் பெறவேண்டும் என்பதே மாணவர்கள் அனைவரதும் ஒரே இலக்காக இருக்கவேண்டும்.
எமது மாணவர்கள் கல்வியில் பிரதேசம், மாவட்டம், மாகாணம் என்ற நிலைகளைக் கடந்து தேசிய ரீதியிலும் வெற்றிபெறவேண்டும்.
தேசிய ரீதியில் முதல் நிலை
வடக்கு, கிழக்கு மாணவர்கள் தேசிய ரீதியில் முதல் நிலை பெற்றார்கள் என்ற நிலையை ஏன் ஏற்படுத்தமுடியாது. அது மாணவர்களான உங்களின் கைகளிலேயே இருக்கின்றது.
இதேவேளை, கல்வியில் சிறந்து விளங்குவதைப்போல, ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கவேண்டும். வடக்கு, கிழக்குத் தமிழ் பிள்ளைகள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள் என்ற நிலையைக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு எமது மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கும் போது எமது அடுத்தடுத்த சந்ததியினர் சிறந்து விளங்குவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |