2025 மின் கட்டண திருத்தம்: மின்சார சபை வெளியிட்டுள்ள தகவல்
2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் அதிக மின்சாரம் தேவைப்படும் என்ற காரணத்தினால் மின்சார கட்டணத்தை குறைக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரால் மின்சார கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் அவரின் கருத்து வெளியாகியுள்ளது.
மின் கட்டண திருத்தம்
அடுத்த ஆண்டு கூடுதலாக 1000 ஜிகாவாட் மணிநேரம் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அடுத்த 6 மாதங்களில் மின் கட்டணத்தை திருத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மின் கட்டண திருத்தம் தொடர்பாக, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவிலும் இது சேர்க்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் மின் உற்பத்தி
தொடர்ந்தும் அவர் தெரிவித்துள்ளதாவது, “இந்த நாட்களில் நீர் மின் உற்பத்தி உயர் மட்டத்தில் உள்ளது, ஆனால் எதிர்காலத்தில் வறண்ட காலநிலையினால் இலங்கை பாதிக்கப்படும்.
இதனால், ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் மின் உற்பத்திக்காக எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆலைகளை இயக்க வேண்டியுள்ளது. அடுத்த ஆண்டுக்கு நீர் மின்சாரம் போதுமானதாக இருக்காது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |