புலிகள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டமைக்கு காரணம் இவர் தான்: பூபாலப்பிள்ளை பிரசாந்தன் குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டு, போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட காரணம் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பே என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் (Poopalappillai Prasanthan) தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட மாநாடு எதிர்வரும் 04 ஆம் திகதி மாலை காரைதீவில் இடம்பெற உள்ளதுடன், இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் காரைதீவு, நாவிதன்வெளி, சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேசங்களில் ஆதரவாளர்களுடனான சந்திப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புலிகள் இயக்கம்
இதன் படி, காரைதீவில் ஆதரவாளர்களை சந்தித்து பேசிய பிரசாந்தன், “புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், புலிகள் இயக்கத்தை அரசியல்மயப்படுத்துகின்ற பொறுப்பு சம்பந்தன் ஐயா தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் அந்த பொறுப்பை சரியாக செய்தார்களா? புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட காரணம் சம்பந்தன் ஐயா தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பே ஆகும். காலம் காலமாக தமிழ் மக்கள் தேர்தல்களில் தவறாமல் வாக்களித்து வருகின்றனர்.
ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று வந்திருக்கின்ற தலைவர்கள் ஒழுங்காக பொறுப்புகளை செய்யவே இல்லை. இதற்கு மிக நல்ல உதாரணம் அம்பாறை மாவட்டம் ஆகும்.
பொது தேர்தல்
அதே நேரத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இழக்கப்பட கூடாது என்பதால் கடந்த பொது தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி இங்கு போட்டியிடவில்லை. அதனால்தான் மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய பட்டியல் ஆசனத்தை தவற விட்டோம்.
அடுத்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி நிச்சயம் போட்டியிடும். அம்பாறை மாவட்டத்தில் இருந்தே வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பதுடன் வெளியில் இருந்து வேட்பாளர்கள் இறக்குமதி செய்யப்படவே மாட்டார்கள்.
மாவை சேனாதிராசா இங்கு வந்து போட்டியிட்டு விட்டு சென்றார். அம்பாறை மாவட்டத்துக்கு வந்து வாக்குகளை பெற்று விட்டு சென்றவர்களை தேடிதான் கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. அடுத்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது இரு ஆசனங்கள் எமக்கு கிடைக்கும்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |