சிறிலங்கா அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை
சமூக ஊடக அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்,மகளிர் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களுடன் இன்று (24) நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஊடக ஒடுக்குமுறை
அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடுக்குமுறை சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது.
நிகழ் நிலைக் காப்பு என்ற பெயரை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும் அதில் எந்தப் பாதுகாப்பும் இல்லை, அதில் அடக்குமுறைகளே இருக்கின்றன.
பொதுமக்களின் குரல்களையும், எதிர்க்கட்சியை அடக்குவதுமே இதன் நோக்கம்.
இதற்கென ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதும் நீக்கப்படுவதும் அதிபரால் தான்.
தான் கூறும்படி செயல்படாவிட்டால், அந்த உறுப்பினர்கள் நீக்கப்படலாம், தமக்கு நட்பாக செயற்படும் அடியாட்களை நியமித்து தனது பதவிக்கும், தனக்கும், தனக்கு நெருக்கமானவர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.