கிரிக்கெட்டில் சிவப்பு அட்டை - புதிய விதியை அறிமுகப்படுத்தும் சிபிஎல்
கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2023 - ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் ஓவர்களுக்கான நேரத்தை வீணடிப்பதற்கான அபராதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் சிவப்பு அட்டை போன்ற அமைப்பு உள்ளது, கடுமையான விதியின்படி, ஒரு இன்னிங்ஸின் 20வது ஓவரின் தொடக்கத்தில் களத்தடுப்பு தரப்பு கால அட்டவணைக்கு பின்தங்கியிருந்தால் ஒரு வீரர் நீக்கப்படுவார்.
ESPNcricinfo இன் அறிக்கையின்படி, இன்னிங்ஸின் 17வது ஓவரை 72 நிமிடம் 15 வினாடிகளிலும், 18வது ஓவரை 76 நிமிடங்கள் 30 வினாடிகளிலும், 19வது ஓவரை 80 நிமிடங்கள் 45 வினாடிகளிலும் முடிக்க வேண்டும், அதே நேரத்தில் கடைசி ஓவரினை 85 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும்.
தவறின் களத்தடுப்பு அணியில் இருந்து ஒரு வீரர் சிவப்பு அட்டை குறி காண்பித்து வெளியேற்றப்படுவார்.
ஓவரின் தொடக்கத்தில்
20 ஆவது ஓவரின் தொடக்கத்தில் களத்தடுப்பு தரப்பு தேவையான விகிதத்திற்குப் பின்தங்கியிருந்தால், அணித்தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வீரர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதே இதன் விதிமுறையாகும்.
சிபிஎல் 2023 இல் துடுப்பெடுத்து ஆடும் அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
துடுப்பெடுத்து ஆடும் வீரர்களுக்கு நடுவர்களிடமிருந்து நேரத்தை வீணடிப்பதற்காக எச்சரிக்கை விடுக்கப்படும்.
நேர விரயம் மீண்டும் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் அணிக்கு ஐந்து ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்படும்.
"எங்கள் டி20 போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நீண்டு கொண்டே செல்வதால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம், மேலும் இந்த போக்கை தடுக்க எங்களால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறோம். விளையாட்டு தொடர்ந்து நகர்வதை உறுதி செய்வது கிரிக்கெட்டில் ஈடுபடுபவர்களின் கடமையாகும்" இவ்வாறு சிபிஎல் இன் போட்டிச் செயற்பாடுகளின் இயக்குனர் மைக்கல் ஹால் மாற்றங்கள் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டபோது கூறினார்
மூன்றாவது நடுவரால்
"ஓவர் விகிதங்கள் மூன்றாவது நடுவரால் கண்காணிக்கப்படும் மற்றும் ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் களத்தில் உள்ள நடுவர்கள் மூலமாக அணித்தலைவர்களுக்கு தெரிவிக்கப்படும், அதே போல் பார்வையாளர்களுக்கு, அவர்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறார்கள் அல்லது முன்நோக்கியிருக்கிறார்கள் என்பதைக் காட்டும் திரையமைப்புகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஆண்களுக்கான சிபிஎல் 2023 சுற்றுப்போட்டியானது எதிர்வரும் ஒகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகிறது, அதே நேரத்தில் பெண்களுக்கான போட்டியானது ஒகஸ்ட் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிகளில் இந்த புதிய சிவப்பு அட்டை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப் படும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.