கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிவப்பு எச்சரிக்கை -ஆபத்தில் நோயாளர்கள்
மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 339 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்படாமையால், மின்வெட்டுக்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐந்து மாத நிலுவைத் தொகை வழங்கப்படாததால், மருத்துவமனையின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றார்.
மின்சார சபை அதிகாரிகள் தகவல்

இதுபற்றி மின்சார சபை அதிகாரிகள் வந்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததாக மூத்த அதிகாரி கூறினார்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்படாவிட்டால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
சத்திரசிகிச்சை அறைகளில்

தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறைகளில் தற்போது அதிகளவான நோயாளர்கள் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்த அதிகாரி, எக்காரணம் கொண்டும் மின்வெட்டு ஏற்பட்டால் நோயாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.