ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்! மீட்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் இருவரையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவிற்கான இலங்கை தூதுவரால் குறித்த இருவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.
அத்துடன், மீட்கப்பட்ட இருவரும் தற்போது ஜிபுட்டியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏவுகணை தாக்குதல்
சீனாவிலிருந்து ஜெட்டா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 7 ஆம் திகதி ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலால் கப்பலின் கட்டுப்பாட்டு அறையை அண்டிய பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டது.
23 பேரைக் கொண்ட பணியாளர்கள் கப்பலில் இருந்ததுடன், அவர்களுள் நால்வர் கடுமையான தீக்காயங்களுக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கை
இந்த கப்பலில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் இருந்துள்ளதுடன், அவர்களில் இருவர் இலங்கையர்கள் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திய கடற்படைக்கு சொந்தமான கொல்கத்தா போர்க் கப்பல் மூலம் குறித்த தரப்பினர் மீட்கப்பட்டனர்.
இந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |