மைத்திரி செய்த தவறால் தப்பிய குற்றவாளி: தேடிப்பிடிப்பதற்காக சிவப்பு அறிவிப்பு
சர்ச்சைக்குரிய ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை அடுத்து, நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவை கைது செய்வதற்கான 'சிவப்பு அறிவிப்பு' பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சட்டமா அதிபர் இன்று (28) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சஜித் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் பரிசீலிக்கப்பட்டது.
மைத்திரி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு
மகளிர் ஊடகக் கூட்டணி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹா" மற்றும் சட்டமா அதிபரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டுள்ளார்.
தொடர்புடைய அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜூட் ஷ்ரமந்தவுக்கு மன்னிப்பு வழங்கிய விதம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று முன்னர் தீர்ப்பளித்திருந்தது.
அதன்படி, மைத்ரிபால சிறிசேனவால் ஜூட் ஷ்ரமந்தவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லாததாக்கப்பட்டு, ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவரை நாட்டிற்கு அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, அவர் சிங்கப்பூரில் இருப்பதாக கிடைத்த முதற்கட்ட தகவலின் அடிப்படையில், அவரை நாட்டிற்கு ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார்.
சிவப்பு அறிவிப்பு
வேண்டுகோளின் பேரில் சிங்கப்பூர் அதிகாரிகள் , சம்பந்தப்பட்ட நபர் சிங்கப்பூரில் இல்லை என்று இலங்கை அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாகவும், அதன்படி, பிரதிவாதி எந்த நாட்டில் தங்கியுள்ளார், வங்கிகள் மூலம் நிதி பரிவர்த்தனைகளைச் செய்தாரா என்பதைக் கண்டறிய சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் முன்னர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சஜித் பண்டார, சாட்சியங்களை முன்வைத்து, பிரதிவாதியான ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவை கைது செய்வதற்கான 'சிவப்பு அறிவிப்புகள்' வெளியிடுவது தொடர்பான ரகசிய தகவல்கள் அடங்கிய உறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதன்போது, நீதிபதிகள் அமர்வு, இந்த மனுக்களை முன்னர் விசாரித்த நீதிபதிகள் அமர்வுதான் இந்த விடயங்களை பரிசீலிக்க வேண்டும் என்றும் மனுவை செப்டம்பர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
