கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!
தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பிரமாண்டமானமுறையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாளையும், நாளை மறுதினமும் நடைபெற இருந்த நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.
"உணவே மருந்து – மருந்தே உணவு" என்ற ஆரோக்கிய தத்துவத்தின்படி, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் இந்த மாபெரும் திருவிழா அண்மையில் கோலாகலமாகத் தொடங்கியது.
ஒரே நேரத்தில் திரண்ட மக்கள்
வடக்கு-கிழக்கின் பாரம்பரிய சுவைகளான ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் போன்ற உணவுகளைச் சுவைப்பதற்காக இலங்கை வாழ் மக்கள் மட்டுமன்றி, கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவிலான புலம்பெயர் தமிழ் உறவுகளும் திரண்டிருந்தனர்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை-தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
இந்நிலையில், விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருமளவிலான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உணவுத் திருவிழா இன்று இடைநடுவே நிறுத்தப்படுவதாக றீச்ஷா நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
அத்துடன், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அதற்கு அடுத்த நாளும் (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
பணம் திருப்பி வழங்கப்படும்
நாளை மற்றும் திங்கட்கிழமை நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுக்களை முன்பதிவு (Booking) செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் அனைத்தும் வங்கிக் கணக்குகள் (Banks) ஊடாக முறையாகத் திருப்பி வழங்கப்படும் என்றும் றீச்ஷா நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

