தேசிய அரசாங்கத்தில் யார் பிரதமர்? மகிந்தவின் நிலைப்பாடு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தானும் நல்ல நண்பர்கள். இருந்தபோதும் அவரது கொள்கைகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்கள் வேறுபட்டிருப்பதால் கூட்டு அரசாங்கத்தில் இணைந்து செயற்பட முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அலரிமாளிகையில் மூத்த ஊடகவியலாளர்கள் சிலருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராகவும், ரணில் விக்ரமசிங்கவை புதிய பிரதமராகவும் தெரிவு செய்யும் தேசிய அரசாங்கம் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக எழுந்துள்ள செய்திகளை பிரதமர் மகிந்த ராஜபக்ச இதன்போது மறுத்துள்ளார்.
எவ்வாறாயினும், விக்ரமசிங்கவைப் பாராட்டிய மகிந்த ராஜபக்ச, தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில், தேசிய அரசாங்கம் குறித்து எந்த அரசியல் கட்சிகளுடனும் விவாதிக்கப்படவில்லை என்றும் அரசாங்கம் அனைத்து பிரச்சினைகளையும் விரைவில் தீர்க்கும் என்றும் கூறினார்.
