யாழில் அமைக்கப்படவுள்ள புனர்வாழ்வு நிலையம் : அமைச்சர் அறிவிப்பு
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக யாழில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற சகல விஷ போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான "முழுநாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட செயற்பாட்டுக் குழுவினை ஸ்தாபித்தல் நிகழ்வை ஆரம்பித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் போதைப்பொருளின் பரவலின் ஆபத்தான கட்டம் தற்போது ஏற்பட்டுள்ளது, இன்றைய சிறுவர்களான நாளைய தலைவர்களை ஆற்றுப்படுத்துகின்ற வழிபடுத்துகின்ற ஒரு அரிய செயற்பாடாக இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
போதைப் பொருள் ஒழிப்பின் இரு சபைகள்
போதைப் பொருளுக்கான கோரிக்கைகளை இல்லாது ஒழித்தல், இதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் தேசிய ரீதியாக உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, மதத் தலைவர்கள் குழு, புனர்வாழ்வுக்கான குழு, பொதுமக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன, அதே சமயம் நாட்டின் 25 மாவட்டங்களிலும் தலா ஒரு மருத்துவக் கூறுகளுடன் கூடிய புனர்வாழ்வு நிலையங்கள் அமைப்பதற்காக நிதி ஒதுக்கிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் ஒழிப்பின் பலமான இரு சபைகளாக அபாயகரங்கள் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு சபை மற்றும் புனர்வாழ்வு சபை இருக்கின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம், இந்த நிகழ்வின் வாயிலாக, இதற்கு ஏற்ற ஒரு பொருத்தமான கட்டடத்தை வழங்குவதற்கான நடவடிக்கையினை கடற்றொழில் அமைச்சர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
இதனைவிட கல்பிட்டிய, மிகிந்தலை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் இடைத்தங்கல் வீடுகளை ஒதுக்கியுள்ளதுடன், அந்த மையங்களில் சிகிச்சை பெறுவோருக்காகவும், அவர்களுக்கு சேவை செய்யும் போதிப்பாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்காகவும் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சமூகத்தில் காணப்படும் உண்மையான தேவையை கருத்தில் கொண்டு, போதைப் பொருள் அடிமைத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதே பிரதான நோக்கமாகும், ஒருவரை குற்றவாளியாக சித்தரிப்பதற்கோ அவர்களை அவமானப்படுத்துவதற்கோ அல்ல, அவர்களை மீண்டும் நல்ல வாழ்க்கைக்குத் திருப்புவதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
இன்றைய சமூகத்தில் பலர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள், அவர்களில் பலர் கல்வி கற்கும் மாணவர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல அஞ்சுகிறார்கள். காரணம் சமூக பழி, அவமானம் மற்றும் நிராகரிப்பு. அத்தகைய நிலையை மாற்றவே செயற்படுகிறோம்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல, அவர்களை நோயாளிகளாகவும் சமூகத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்க வேண்டும், அவர்களுக்கு சிகிச்சையும், ஆலோசனையும், வழிகாட்டுதலும் வழங்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு தொழில்கல்வி வழங்கி, சுயதொழில் அல்லது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், அவர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் நிலைக்கு கொண்டு வருவது இச் செயற்றிட்டத்தின் இலக்காகும்.
இந்த முயற்சியின் கீழ் சுமார் ஐயாயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக கைத்தொழில் அபிவிருத்தி சபை உடன்பட்டிருக்கின்றது, இந்த திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக அல்ல, நடைமுறைப்படுத்தப்படும் செயல் திட்டங்களாகவே முன்னெடுக்கப்படும்.
எனவே, இது ஒரு குற்றம்சாட்டும் நடவடிக்கை அல்ல மனிதநேய அடிப்படையில், சமூக மீட்புக்கான ஒரு முக்கியமான முயற்சியாகும். இந்த பொறுப்பு அனைவருக்கும் உள்ளதுடன் இந்த தேசிய சபையின் தலைவராக ஜனாதிபதி செயற்படுவார்.
இச் செயற்பாட்டிற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் போதைப் பொருள் தொடர்பான தகவல்களை வழங்க 1818 என்ற தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நம்பிக்கையுடன் தகவல்களை வழங்க முடியும்.” என அமைச்சர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |