சட்டவிரோத மீன்பிடி படகுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க தீர்மானம்
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் கடற்றொழில் அமைச்சின் படகு கண்காணிப்பு பிரிவினரால் அவதானிக்கப்பட்டு வருவதுடன் அவ்வாறு எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக 185 இற்கு மேற்பட்ட படகுகள் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில், இலங்கையின் கடல் எல்லைகளை தாண்டிச் சென்று சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் மனிதாபிமான நடவடிக்கையாக ஒரு வார காலத்தினுள் விடுவிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடிப் படகு உரிமையாளர் சங்கத்துடன் நேற்று(04) அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தொடரில் கலற்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு கருவி
குறிப்பிட்ட விடயம் தொடர்பில் சங்கத்தின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,

“படகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவி போதிய மின்சாரமின்மையால் செயலிழக்கும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் அது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லை தாண்டி மீன் பிடிக்க வேண்டிய நிலையேற்படும்.
அத்துடன் தற்போது தடுத்த வைக்கப்பட்டுள்ள படகுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை செய்யும் படகின் படகோட்டிகளுக்கு கடற்றொழில் அமைச்சினால் உரிய தண்டணை வழங்குவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை” என்றனர்.
விம்ஸ் (VMS) கட்டமைப்பு
இதன்போது கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“இலங்கையிலுள்ள அனைத்து ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளும் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் விம்ஸ் (VMS) கட்டமைப்பின் ஊடாக கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், தவறிழைப்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படாவிட்டால் சர்வதேச அமைப்புக்களினால் தடை விதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே எமது கடற்றொழிலைப் பாதுகாப்பதற்காக கண்டிப்பான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அதற்கு கடற்றொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மேலும், சர்வதேச கடற்பரப்பில் தவறு செய்யும் ஒருசில படகுகள் காரணமாக எமது கடற்றொழில் முற்றாக அழிவடைவதற்கு இடமளிக்க முடியாது.
நாட்டுக்கு பெருமளவு அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கும் இந்த தொழிலை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தொடர்ந்தும் இவ்வாறான தவறுகளைச் செய்தால் தவறு செய்யும் படகுகளுக்கு 6 மாதங்கள் தடை விதிப்பதற்கான சட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்துள்ளார்.