கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறப்பு
கிளிநொச்சி பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் தேவையை கருத்திற்கொண்டு இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று வியாழக்கிழமை (10.09.2026) இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறக்கப்பட்டுள்ளது.
முரசுமோட்டை பகுதியில் நிலவும் வறட்சியால் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நீர்ப்பாசனக் கால்வாய்கள் ஊடாக நீர் திறக்கப்படாவிட்டால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்து, புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பினால் கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசனப் பொறியியலாளருக்கு அண்மையில் அவசரக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால்
அந்தக் கடிதத்தின் அடிப்படையில், நிலைமையின் தீவிரத்தை கருத்திற்கொண்டு கால்நடைகளின் குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்யும் நோக்கில் இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நீர் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, விவசாயிகள் குறித்த நீரை வயல் நிலங்களுக்குப் பாய்ச்சுவதையோ அல்லது ஏனைய விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |