வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரே மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம்!
இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரே மக்களுக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்கி, நாட்டின் பொருளாதாரத்தை அரசாங்கம் ஸ்திரப்படுத்தி வருவதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அஸ்வெசும நலன்புரித் திட்டக் கொடுப்பனவு
பொருளாதார அழுத்தத்தின் சுமையை முழுமையாகப் பொதுமக்கள் மீது சுமத்தாமல், அரசாங்கம் அதனைத் தாங்கிக்கொண்டு மக்களுக்குச் சலுகைகளை வழங்கியுள்ளது.

ஜனவரி மாத ஆரம்பத்திலேயே பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள 6,000 ரூபாய் வழங்கப்பட்டதுடன், மாணவர்களுக்குக் காலணிகளும் வழங்கப்பட்டன.
அத்துடன், அஸ்வெசும நலன்புரித் திட்டக் கொடுப்பனவு, மஹபொல புலமைப்பரிசில், மாணவர் உதவித்தொகை, சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு ஆகியனவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், விவசாயிகளுக்காக வழங்கப்பட்டு வந்த 15,000 ரூபாய் உர மானியம் 35,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தை விலையின் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல், பெற்றோல் மற்றும் டீசலுக்கு அரசாங்கம் மானியம் வழங்கியுள்ளது.
அத்தோடு, தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வருவதால், அதற்கேற்ப எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் எரிபொருள் விலை நிவாரணம் வழங்கப்படும்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |