கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலையின் சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு
கணேமுல்ல சஞ்ஜீவ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
விளக்கமறியல் நீடிப்பு
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (21) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 'சூம்' (Zoom) தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் இதுவரை முன்னெடுத்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
வேறு சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுபுன் பிரதீப் குமார என்ற சந்தேக நபரை இந்த வழக்கில் 35ஆவது சந்தேக நபராக பெயரிட அனுமதி வழங்குமாறு குறித்த அதிகாரி நீதிமன்றில் கோரியுள்ளார்.
இதற்கு அனுமதி வழங்கிய நீதவான், அடுத்த தவணையின் போது குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாரு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதவான் அனுமதி
அத்தோடு சமர்ப்பணங்களை முன்வைத்த கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரி, இந்தச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் உள்ள மற்றுமொரு சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அதற்கு அனுமதி வழங்குமாறும் அவர் நீதிமன்றில் கோரிய நிலையில் அதற்கும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

அத்தோடு, இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் கெஹெல்பத்தார பத்மே உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களின் தடுப்புக் காவல் உத்தரவுகள் தொடர்பான பிரதிகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு ஒரு திகதியை வழங்குமாறும் அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் நீதிமன்றில் கோரியுள்ளார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதவான், இந்தச் சந்தேக நபர்களை டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு குற்றவியல் பிரிவினருக்கு உத்தரவிட்டமை குறப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
2 நாட்கள் முன்