ஜேவிபி கிளர்ச்சியின் போது காணாமலாக்கப்பட்டோரை நினைவு கூரல் : அநுரவிற்கு அழைப்பு
ரத்தொலுவையில் (Raddoluwa) ஞாயிறுக்கிழமை (27) இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுதின நிகழ்வுகளில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) கலந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
1988 - 1989ம் ஆண்டுகளில் ஜேவிபியின் (JVP) கிளர்ச்சியின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் 33 வருடங்களாக நீதிக்காக போராடுகின்ற நிலையில் இந்த வருடம் 34வது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகளில் ஜனாதிபதியை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
60,000க்கும் அதிகமான இளைஞர்கள்
ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சி காலத்தின் போது 60,000க்கும் அதிகமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர், கடத்தப்பட்டனர் அல்லது காணாமல் போயினர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்வதற்கான அரசியல் உறுதிப்பாடு முன்னைய அரசாங்கங்கள் எவற்றிடமும் இருந்ததில்லை என காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதியை வழங்குவேன் என்பது தற்போதைய ஜனாதிபதியின் வாக்குறுதிகளில் ஒன்று என காணாமல்போனவர்களின் குடும்பங்களின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள்
கடந்த காலங்களில் இந்த நினைவுகூரும் நிகழ்விற்கு நாங்கள் ஜனாதிபதிகள் எவரையும் அழைக்கவில்லை அவர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்திற்கு தீர்வை காணமுயலாததே இதற்கு காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்கள் அலுவலகம், இழப்பீட்டிற்கான அலுவலகம் போன்றவற்றை அமைத்ததன் மூலம் சிறிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் முன்னைய ஜனாதிபதிகளிற்கு இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் உறுதிப்பாடு இருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் சர்வதேச சமூகத்தினை திருப்திப்படுத்துவதற்காகவே இந்த அலுவலகங்களை அமைத்தனர், ஆகவே தற்போதைய அரசாங்கம் அரசியல் உறுதிப்பாட்டுடன் செயற்பட்டு கடந்த காலங்களில் காணாமல் போனவர்களிற்கு நீதியை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |