வெளிநாடுகளில் தொழில் புரிவோர் நாட்டுக்கு பணத்தை அனுப்புவது குறைந்துள்ளது
இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கும் பிரதான ஆதாரமாக இருக்கும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அதிகாரபூர்வமான வழிகளில் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணமானது, கடந்த நவம்பர் மாதத்தில் மேலும் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் புள்ளவிபரங்களுக்கு அமைய கடந்த நவம்பர் மாதம் வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களிடம் இருந்து கிடைத்த மொத்த தொகை 271.4 மில்லியன் டொலர்கள் என தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் தொழில் புரிவோரிடம் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிடைத்த டொலரின் மொத்த பெறுமதி 611.7 மில்லியனாகும். இதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 55.6 வீதம் குறைவாகவே கிடைத்துள்ளது.
இதனிடையே 2021 ஆம் ஆண்டு முதல் 11 மாதங்களில் கிடைத்த அந்நிய செலாவணியின் பெறுமதி 5 ஆயிரத்து 166.3 மில்லியன் டொலர்களாகும். எனினும் கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் கிடைத்த டொலரின் பெறுமதி 6 ஆயிரத்து 291.2 மில்லியனாகும்.
கடந்த ஒக்டோபர் மாதம் வெளிநாடுகளில் இருந்து 317.4 மில்லியன் டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த. 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 630.7 மில்லியன் டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 49.6 வீதம் குறைவாகவே டொலர்கள் கிடைத்துள்ளன.
இதனிடையே வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோர் அதிகாரபூர்வமான வழிகள் மூலம் மாத்திரமே பணத்தை அனுப்புமாறும், உத்தியோகபூர்வமற்ற வழிகளில் பணத்தை அனுப்புவது தெரிந்தோ, தெரியாமலோ சட்டவிரோத செயலுக்கு செய்யும் உதவி எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தார்.