பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு
மாத்தளை மாவட்டத்தில் டிசம்பர் 16ஆம் திகதி முடிந்தவரை பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி (Anura Kumara Dissanayake) அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து நேற்று (06) மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
அத்துடன் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்பதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
சீரற்ற காலநிலை
மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக மாத்தளை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில், 5,501 குடும்பங்களைச் சேர்ந்த 11,804 பேர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மாவட்டத்தில் இயங்கும் 44 பாதுகாப்பு மையங்களில் 4,113 பேர் தங்கியுள்ள நிலையில் 119 வீடுகள் முழுமையாகவும், 2,618 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |